Technology News In Your Hand

CALL BREAK : அழைப்பு முறிவு பிரச்னைக்கு தீர்வு காணாவிடில் ரூ.10 லட்சம் அபராதம்: டிராய் அதிரடி

அழைப்பு முறிவு பிரச்னைக்கு தீர்வு காணாத தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அறிவித்துள்ளது. இதுதொடர்பாக புதிய விதிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சேவைகளில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அவற்றில் அழைப்பு முறிவு பிரச்னைதான் பிரதானமாக உள்ளது. செல்லிடப்பேசி அல்லது தரைவழி தொலைபேசி வாயிலாக பேசிக் கொண்டிருக்கும்போது இணைப்பு தாமாகவே துண்டிக்கப்படுகிறது என்பதே பெரும்பாலானோரது புகார்.

அதிலும் பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் சேவைகளில்தான் இத்தகைய அழைப்பு முறிவு பிரச்னை அதிகமாக நேர்வதாகக் கூறப்படுகிறது.
இதுபோன்ற குறைபாடுகளுக்குத் தொடர்ந்து தீர்வு காணாமலே இருந்தால் சம்பந்தப்பட்ட தொலைத் தொடர்பு நிறுவனத்துக்கு ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கலாம் என விதி உள்ளது. ஆனால், இந்த அபராதத் தொகையை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் சுலபமாகச் செலுத்தி விட்டு, அழைப்பு முறிவு பிரச்னைக்கு தீர்வு காணாமலேயே இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த விதிகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள டிராய் முடிவு செய்தது.

அதன்படி, மொத்த அழைப்புகளில் எவ்வளவு சதவீதம் அழைப்பு முறிவு இருக்கலாம் என்ற வரம்பை மறுநிர்ணயம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இப்பிரச்னைக்கு 9 மாதங்கள் (மூன்று காலாண்டுகள்) வரை தீர்வு காணாமல் இருந்தால் சம்பந்தப்பட்ட தொலைத் தொடர்பு நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிகளானது அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.