Technology News In Your Hand

நோக்கியா ஸ்மார்ட்போன் அறிமுகம்


எச்.எம்.டி. குளோபல் நிறுவனம், நோக்கியா பிராண்டில் மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை புது தில்லியில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது.

இதுகுறித்து நோக்கியா இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் அஜய் மேத்தா கூறியதாவது:

நீடித்த உழைப்பு மற்றும் நம்பிக்கைக்குப் பாத்திரமான நோக்கியா மக்களின் நன்மதிப்பைப் பெற்ற பிராண்டாக திகழ்கிறது. அந்த வகையில் நோக்கியா பிராண்டில் தற்போது மூன்று வகையான ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

நோக்கியா-3 மற்றும் நோக்கியா-5 ரக ஸ்மார்ட்போன்களின் விலை முறையே ரூ.9,499 மற்றும் ரூ.12,899-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நோக்கியா-3 ஸ்மார்ட்போன் ஜூன் 16 முதல் சில்லறை விற்பனையகங்களில் கிடைக்கும். அதேசமயம், நோக்கியா-5 ரக ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு ஜூலை 7-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.

இவைதவிர, நோக்கியா-6 என்ற அதி நவீன ரக செல்லிடப்பேசியும் அறிமுகமாகிறது. இதன் விலை ரூ.14,999-ஆகும். இதற்கான முன்பதிவு ஜூலை 14-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த ரக ஸ்மார்ட்போன் அமேஸான் வலைதளத்தில் மட்டுமே கிடைக்கும்.

இந்திய சந்தையில் கடந்த மாதம் புதிய அவதாரம் எடுத்த நோக்கியா 3310 மாடல் செல்லிடப்பேசிக்கு சந்தையில் அதிக வரவேற்பு காணப்படுகிறது என்றார் அவர்.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நோக்கியா ஸ்மார்ட்போன்கள் சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நோக்கியா பிராண்ட் செல்லிடப்பேசி மற்றும் டேப்லட்டுகளை உலகச் சந்தைகளில் மீண்டும் விற்பனை செய்ய எச்.எம்.டி. குளோபல் 10-ஆண்டுகளுக்கு உரிமம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.